கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில், இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என்று கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை அப்பகுதி மக்கள் வாங்கி அருந்தியுள்ளனர். கள்ளச் சாராயத்தை குடித்த பலருக்கும் வயிற்று வலி, வாந்தி, மயக்கம், தலைவலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படவே 30 பேர் வரை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரும் அடுத்தடுத்து உயிரிழக்க, பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கள்ளச் சாராயம் விற்ற கோவிந்தராஜ் (எ) கண்ணுகுட்டி என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில் மெத்தனால் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் பலியானதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச் சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன என்ற ஆளுநர், “அவை சட்ட விரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்” என்றும் தமிழக அரசை மறைமுகமாக சாடியுள்ளார்.