நாடு முழுவதும் நடந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் துணை பேராசிரியர் பணி மற்றும் ஜுனியர் ரிசர்ஜ் பெல்லோஷிப் பெறுவதற்காக ஆண்டுதோறும் யுஜிசி நெட் தேர்வு (UGC NET Exam) என்பது மத்திய கல்வி அமைச்சகம் மேற்பார்வையில் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நெட் தேர்வில் பாஸ் செய்யும்பட்சத்தில் துணை பேராசிரியர் பணியை பெற முடியும். அதுமட்டுமின்றி ஜுனியர் ரிசர்ஜ் பெல்லோ ஷிப் மூலமாக மாத நிதி உதவி பெற்று முனைவர் பட்டம் பெறலாம். இதனால் ஆராய்ச்சி படிப்பு பயில்வோர் மற்றும் துணை பேராசிரியர் பணியை விரும்புவோர் இந்த தேர்வை அதிகம் எழுதி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு என்பது நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. 2 ஷிப்டுகளாக நடந்தது. இந்நிலையில் தான் இந்த தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு என்பது நேற்று இரவு மத்திய கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினம் யுஜிசி நெட் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டும் யுஜிசி நெட் தேர்வு நாடு முழுவதும் ஜுன் 18ம் தேதி (நேற்று முன்தினம்) நடத்தப்பட்டது. 2 ஷிப்டுகளாக தேர்வு நடந்தது. இந்நிலையில் தான் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தியன் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு சென்டரின் தேசிய சைபர் க்ரைம் த்ரெட் அனலிட்டிக்ஸ் யூனிட்டில் இருந்து ஒரு தகவல் பல்கலைக்கழக மாநில குழுவுக்கு சென்றது. தேர்வு செயல்முறையின் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி யுஜிசி நெட் ஜுன் 2024 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேர்வு மீண்டும் நடத்தப்படும். இதுதொடர்பான அறிவிப்புகள் தனித்தனியாக வெளியிடப்படும். மேலும் இதுதொடர்பாக விசாரணை என்பது மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தேர்வு ரத்து தொடர்பான காரணத்தை மிகவும் டெக்னிக்கல்லாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய தேர்வு முகமை நடத்தும் இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார் பூதாகரமாகி உள்ளது. இதனால் நெட் தேர்வு ரத்து தொடர்பான காரணத்தை வெளிப்படையாக கூறாமல் மத்திய கல்வி அமைச்சகம் மறைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போதைய நெட் தேர்வு ரத்துவுக்கு முக்கிய 2 விஷயங்களில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது ஒன்று நெட் தேர்வின்போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்து இருக்கலாம். இல்லாவிட்டால் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்து இருக்கலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றின் காரணமாக தான் யுஜிசி நெட் 2024 தேர்வு என்பது ரத்து செய்யப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.