“நீட் வினாத்தாள் கசிவுக்கு கல்வி நிறுவனங்களை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கைப்பற்றியதே காரணம்” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:-
இது ஒரு தேசிய நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போல் இது கல்வி நெருக்கடி. அரசுக்கு பதிலளிக்கும் அளவுக்கு கூட திறனில்லை. மத்திய அரசும், பிரதமரும் மௌனம் சாதிக்கின்றனர். சபாநாயகர் தேர்தலே தற்போது பிரதமருக்கு முக்கிய விஷயம். தனது அரசு பற்றியும், சபாநாயகர் பற்றி மட்டுமே பிரதமர் கவலைப்படுகிறார்.
ரஷ்யா – உக்ரைன் போரை மோடி ஜி நிறுத்தினார் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அதே மோடி ஜியால் இந்த வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த முடியவில்லை. அல்லது அவர் அதனை தடுக்க விரும்பவில்லையா எனத் தெரியவில்லை. பிரதமர் மோடி உளவியல் ரீதியாக சரிந்துவிட்டார். இனி, தனது அரசாங்கத்தையும் இதேபோல் நடத்த போராடுவார்.
மோடியின் அடிப்படைக் கருத்து இந்தத் தேர்தலில் அழிக்கப்பட்டுள்ளது. அவரின் கருத்தை எதிர்க்கட்சிகள் தகர்த்துவிட்டன. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதே மோடி அரசாங்கத்தின் எண்ணம். ஆனால், இப்போது மக்கள் மோடிக்கு பயப்படவில்லை. இப்போது நாட்டில் யாரும் அவருக்கு பயப்படுவதில்லை. முன்பு பிரதமர் மோடிக்கு 56 இஞ்ச் விரிந்த மார்பு இருந்தது. ஆனால், இப்போது அது 30-32 ஆகிவிட்டது. பாஜகவில் உள்கட்சிப் பிரச்சினைகள் உள்ளன. அவர்களின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸிலும் பிரச்சினைகள் இருக்கின்றன.
இந்தியாவில் சுதந்திரமான கல்வி இல்லாமல் போனதற்கு பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தான் காரணம். கல்வித் துறைக்குள் பாஜகவும் அதன் ஆதரவு அமைப்புகளும் ஊடுருவி, கல்வியை சீர்குலைத்துள்ளன. மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் என பாஜக ஆளும் மாநிலங்கள் நீட் ஊழல் மையங்களாக திகழ்கிறது. நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துவிட்டார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு கல்வி நிறுவனங்களை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கைப்பற்றியதே காரணம். ஒவ்வொரு பதவியிலும் அவர்கள் தங்கள் ஆட்களை வைத்துள்ளனர். அதை மாற்றியமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வினாத்தாள் கசிவுகளை தடுக்க முயற்சிக்கும்.
இப்போது நாம் ஒரு பேரழிவில் உள்ளோம் என்பதையும், எதையும் செய்ய முடியாத ஓர் அரசாங்கம் எங்களிடம் உள்ளது என்பதையும் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். பண மதிப்பிழப்பு மூலம் பொருளாதாரத்துக்கு செய்ததை, தற்போது கல்வி முறையிலும் மோடி செய்துள்ளார். ஒரு சுதந்திரமான கல்வி முறை தகர்க்கப்பட்டதால் தான் இப்போது அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.