காவல்துறை பொய் வழக்கு போடுவதில் தான் கவனம் செலுத்துகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் அக்கறை செலுத்தவில்லை என்றும், கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கோஷம் எழுப்பினார்.
பெண் காவலர்களை இழிவுபடுத்தியது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைதாகி புழல் சிறையில் யூடியூபர் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதும் குண்டாஸ் சட்டமும் பாய்ந்துள்ளது. சிறையில் உள்ள சவுக்கு சங்கர் , மோசடி வழக்கு தொடர்பாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிறகு போலீசார் சவுக்கு சங்கரை அழைத்து சென்றனர். அப்பொழுது நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் முழக்கம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. சவுக்கு சங்கர் கூறுகையில், “தமிழக அரசு தங்களை எதிர்த்து பேசுபவர்களை, அரசியல் எதிரிகளை பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதற்காகதான் காவல்துறையை வைத்திருக்கிறது. பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிக்க செலுத்தியிருந்தால் 33 உயிர்கள் பலி போயிருக்காது. திமுகவின் அரசியல் எதிரிகளை பழிவாங்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கையாலாகாத தனத்தால் இதுவரை 55 உயிர்கள் கள்ளச்சாராயத்தால் பறிபோயிருக்கிறது. இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று குரல் எழுப்பினார்.