திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்து வருகிறது என்றும், போதைப் பொருள் பயன்பாட்டை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு, மத்திய பேரிடர் நிதியில் இருந்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.14 ஆயிரம் வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது. ஆனால் தமிழக அரசு, ரூ.13,500 மட்டும் விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது. தற்போது திமுக அரசு, குறுவை தொகுப்பு திட்டத்திற்கு ரூ.78.67 கோடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்கள். அதில் ரூ. 24.05 கோடி மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளார்கள். மீதம் ரூ. 54.17 கோடிதான் விவசாயிகளுக்கு கிடைக்கும். இதற்கு கூடுதலான நிதியை ஒதுக்க வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு குறுவைக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கர்ணாக்குளம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சிலர் புதுச்சேரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராய உயிரிழப்பு நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு, போதை பொருளைத் தடுக்க வேண்டும், போதைப் பொருள் பயன்பாட்டை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

மத்திய அரசின் ஜல் சக்தியின் இணை அமைச்சரான சோமண்ணா, மேகதாதுவில் அணைக் கட்டப்படும் என அறிவித்ததாக கூறப்படுகிறது. கர்நாடகா, தமிழகத்திற்கு இடையே பிரச்சனை இருக்கின்ற போது, கர்நாடகத்தில் இருந்து ஒருவரை, இந்த துறைக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கியது விவசாயிகளுக்கு செய்கின்ற துரோகமாகும். அண்மையில் அவர், மத்திய, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய அரசுகள் ஒன்றாக பேசி, மேகதாதுவில் அணைக் கட்டுவதை செயல்படுத்த இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேகதாதுவில் அணைக்கட்டுவது என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே தண்ணீர் கிடைக்காமல் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறிக்கொண்டு இருக்கின்ற நேரத்தில் மத்திய இணை அமைச்சர் சோமண்ணா பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த முறை திமுக கூட்டணி கட்சியினர் 38 பேர் எம்பியாக வெற்றி பெற்றார்கள். அப்போதே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு பரிகாரம் செய்திருக்கலாம். தற்போது 40 எம்பிக்கள் உள்ளனர். தமிழக மக்களின் குரலாக அழுத்தம் கொடுத்து, நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும். ஆனால், 24-ம் தேதி திமுக போராட்டம் அறிவித்திருப்பது கண்துடைப்பாகும். மக்களை ஏமாற்றுவதற்கான நாடகமாகும். இங்கு போராட்டம் செய்வதால் பயனில்லை. திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு, நாடாளுமன்றத்தில் போராட்டம் செய்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தது அதிமுக. ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுகவைச் சேர்ந்தவர்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளாக மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருந்த போது, ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் கோடி கடன் இருந்தபோது, மக்களை கடன்காரர்களாக்கி விட்டார்கள் என்றனர். தற்போது திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளார்கள். ஆனால் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து தனித் பெரும்பானையுடன் வரும் 2026-ல் ஆட்சி அமைப்போம். ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவுக்கு எதிராக பலாப்பழத்தை வைத்து பூஜை செய்தவர். அவர் எந்தக் காலத்திலும் கட்சிக்கு விஸ்வாசம் இல்லாதவர், சுயநலமிக்கவர். ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் துரோகம் செய்த அவரை கட்சி தொண்டன் கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். இவ்வாறு அவர் கூறினார்.