“மெத்தனாலை கட்டுப்படுத்தி இருந்தால் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்” என்று விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் கருத்து தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட 17 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த நச்சு சாராயத்தை குடித்து 22 பேர் உயிரிழந்தனர். அப்போது மெத்தனாலை கட்டுப்படுத்துவோம் என தமிழக அரசு தெரிவித்தது. அப்படி செய்திருந்தால் இந்த உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். மெத்தனால் தொழிற்சாலைகளுக்கு மட்டும் தான் சப்ளை செய்யப்படுகிறது. அங்கிருந்து சாராய வியாபாரிகளுக்கு எப்படி வருகிறது என்பதை கண்டுபிடிப்பது தமிழக அரசுக்கு பெரிய விஷயமல்ல. எளிதாக அதனை டிராக் செய்ய முடியும். அதைக் கண்டுபிடித்து ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் கட்டுப்படுத்தினால் தான் தமிழகத்தை இதுபோன்ற கள்ள மது பிடியில் இருந்து விடுவிக்க முடியும்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து, சிறார் குற்றங்கள் பெருகியுள்ளது. அதனையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கையை அரசு எடுக்கும்போது அனைத்து கட்சிகளும் உறுதுணையாக, ஆதரவாக இருக்க வேண்டும். இது தமிழகத்தின் எதிர்காலத்தை மீட்டெடுக்கும் பணி. ஆதலால் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அரசியல் செய்யக் கூடாது. இதற்காக ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது பதிவியில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் ஆணையத்தை அமைத்து, அந்த ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் போதைப்பொருள் புழக்கம் உள்ளது. அதிகமான போதைப் பொருட்கள் பிடிபட்டது குஜராத்தில் தான். இது ஒரு மாநிலம், ஒரு கட்சி, ஒரு அரசு சம்மந்தப்பட்டது அல்ல. தலைமுறையை மீட்கும் பணி. இதில் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. அரசாங்கம் என்பதால் அவர்களுக்கு பொறுப்புகள் கூடுதலாக இருக்கிறது. அதனை நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி விவகாரம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அங்கு திமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறுகிய அரசியல் செய்து முதல்வரை பதவி விலகச் சொல்வது அழகல்ல. கடந்த கால அதிமுக ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று பலர் இறந்துள்ளனர். அப்போது அவர்கள் பதவி விலகவில்லை. இது வேடிக்கையானது. போதையில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பது அனைவருடைய பொறுப்பு. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அதிமுக தான் மதுக்கடைகளை திறந்தனர். எம்ஜிஆர் தான் மது அடிமைகளை உருவாக்கினார். கருணாநிதி மதுக்கடைகளை மூடியபோது அதனை மீண்டும் திறந்தது எம்ஜிஆர் தான். அதுமடடுமின்றி மதுபான விற்பனை, உற்பத்திக்கு அரசு நிறுவனங்களை உருவாக்கியது எம்ஜிஆர். அப்படியானால் அதிமுக பேச என்ன தார்மிக உரிமை உள்ளது? இதுபோன்ற சம்பவங்கள் எல்லா ஆட்சிகாலத்திலும் நடைபெறுகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகமாக நடக்க காரணம் வேலையின்மை. இங்கு தொழிற்சாலைகள் எதுவும் கிடையாது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் குறையும். பின்னடைந்த மாவட்டங்களாகவும், வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் இருக்கும் மாவட்டங்களாக இருப்பதால் இதுபோன்ற தீமைகள் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.