ரேஷன் கடைகளில் விட்டுப் போன மாதங்களுக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை நிபந்தனை ஏதுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என பலவற்றை சுட்டிக்காட்டலாம். இந்த வகையில், ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால், இந்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை.
இதற்கு பதில் அளித்துள்ள உணவுத் துறை அமைச்சர், மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், முந்தைய ஆட்சிக் காலத்தில்கூட இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகவும் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிகள் வரும் என்பது ஏற்கெனவே அறிந்த ஒன்று. அப்படியிருக்கையில், இதற்கேற்ப நடவடிக்கையினை முன்கூட்டியே தி.மு.க. அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை. இது தி.மு.க. அரசின் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
மேலும், ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை வாங்காதவர்கள் இம்மாத இறுதி வரையில் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்றைய தேதி வரை, சென்ற மாதம் மற்றும் இந்த மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ரேஷன் கடைகளை சென்றடையவில்லை என்று நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இந்த மாதத்தில் இன்னும் 11 நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், இந்தப் பொருட்கள் தங்களுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் செயலற்ற தன்மை காரணமாக, ஏழையெளிய மக்கள் பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை அதிக விலை கொடுத்து வெளிச் சந்தையில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்மூலம் பொதுமக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையற்ற செயலுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, விட்டுப் போன மாதங்களுக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை நிபந்தனை ஏதுமின்றி வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவும், தேர்தல் வாக்குறுதிக்கேற்ப, கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றினை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.