கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிச்சாமி மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் என்று மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையல் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேரில் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு வர தயங்கியதால் தான் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியன் கூறியதாவது:-
கடந்த ஆண்டு மரக்காணத்தில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் சிபிசிஐடிதான் விசாரித்தது. இரண்டு மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட அந்த விவகாரத்தில் 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். எட்டு பேர் குண்டத்தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன. 16 காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எல்லா கட்சிகளுக்கும் குற்றம் சாட்ட உரிமை உள்ளது. அதே சமையம் ஒரு ஆட்சிக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் .
கடந்த இரு ஆண்டுகள் மட்டுமல்ல என்னிடத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே நடைபெற்ற இதுபோன்ற கள்ளச் சாராய சாவுக்களின் பட்டியல் உள்ளது. 2001ல் ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 53 பேர் உயிரிழந்தனர். 200 பேரின் பார்வை பறிபோனது. ஆனால் இதை போல் ஏட்டிக்கி போட்டி என்று நான் சொல்ல வரவில்லை. குஜராத்தில் மட்டும் கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் எட்டு, ஒன்பது சம்பவங்கள் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த மாநில முதல்வர்களை எல்லாம் யாரும் பதவி விலக சொல்லவில்லை.
கடந்த 2001 இல் ஜெயலலிதாவை பதவி விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிச்சாமி மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.