நீட் தேர்வில் நடந்த மோசடி, ஊழல், கல்வி மாஃபியாவை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டில் இருந்து எவ்வளவு முயன்றாலும் பாஜகவால் தப்ப முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
நீட் தேர்வில் நடந்த மோசடி, ஊழல், கல்வி மாஃபியாவை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டில் இருந்து எவ்வளவு முயன்றாலும் பாஜகவால் தப்ப முடியாது. காங்கிரஸின் 3 கேள்விகளுக்கு மோடி அரசு பதில் சொல்ல வேண்டும்.
வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் அறிவிக்கப்படவில்லை என்பது உண்மை. ஆனால், இது குறித்து கல்வி அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்தச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த சட்டத்துக்கு 13 பிப்ரவரி 2024 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது. ஆனால், நேற்று இரவுதான் (வெள்ளிக்கிழமை) சட்டம் அறிவிக்கப்பட்டது. சட்டம் அறிவிக்கப்பட்டு விட்டதாகவும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அதன் விதிகளை உருவாக்குவதாகவும் மோடி அரசின் கல்வி அமைச்சர் மீண்டும் பொய் சொன்னது ஏன்?
வினாத்தாள் கசிவை முதலில் மறுத்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பின்னர் குஜராத், பிகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, சில இடங்களில் வினாத்தாள்கள் கசிந்ததால், மீண்டும் தேர்வை நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் 6 லட்சம் பேருக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நீட் தேர்வில் 0.001% முறைகேடு நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியும், “முறைகேடு” என்ற விஷயத்தை ஏற்றுக் கொண்ட மோடி அரசு, ஏன் தேர்வை மீண்டும் நடத்தவில்லை?
தேசிய தேர்வு முகமை கடந்த 9 நாட்களில் 3 முக்கிய தேர்வுகளை ரத்து செய்துள்ளது அல்லது ஒத்திவைத்துள்ளது. வினாத்தாள் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்ட பிறகும், உத்தரப்பிரதேசத்தின் காவல்துறை ஆள்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரியத்தின் (UPPRPB) வினாத்தாள் கசிந்தது. வினாத்தாள் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றிய பின்னரும் ஏன் தாள்கள் கசிகின்றன? கடந்த 7 ஆண்டுகளில் 70 ஆவணங்கள் கசிந்தபோது, மோடி அரசு அதன் மீது ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை?
புதிய சட்டம் கொண்டு வருவது என்பது உண்மையை மறைக்கும் பாஜகவின் முயற்சி அன்றி வேறில்லை. பாஜக – ஆர்எஸ்எஸ்-ன் குறுக்கீடு மற்றும் பக்கவிளைவுகளில் இருந்து கல்வி அமைப்பும், தன்னாட்சி அமைப்புகளும் விடுபடாத வரை, இந்த மோசடி, திருட்டு, ஊழல் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.