“சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்தார், ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறினார். இதனால்தான், திமுக அன்றைக்கு சிபிஐ விசாரணை கோரியது. ஆனால், நாங்கள் இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக இருக்கிறோம். எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளச் சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வருந்தத்தக்கது. யாராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அதை கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவையில் ஏதாவது பிரச்சினை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே எதிர்கட்சி தலைவர் பழனிசாமி இல்லாத குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடக்க முயற்சித்து வருகிறார். அவர் எங்களுக்கு சட்டப்பேரவையில் பேச அனுமதி தரவில்லை என கூறுகிறார்.
ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் அழைத்து தங்களது கருத்துக்களை பேசுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என சட்டப்பேரவை தலைவரிடம் கேட்டார். எனவே அதிமுகவுக்கு பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை என்பது அப்பட்டமான பொய்யாகும். இதன்மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என தப்புக் கணக்கு போட்டிருக்கிறார்கள். மக்களவை தேர்தல் தோல்வியை மறைப்பதற்கு அதிமுகவினர் எத்தனை முயற்சி எடுத்தாலும் ஜனநாயத்தின் மீது நம்பிக்கை கொண்ட முதல்வர் எதிர்க்கட்சிகளை மதிக்க கூடியவர் என்பதை கடந்த 2 நாட்களாக நிரூபித்து இருக்கிறார்.
அதேபோல சட்டப்பேரவை தலைவரும் கூட எதிர்கட்சி தலைவர் எந்த கருத்தையும் சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று தான் கூறினார். காரணம் கேள்வி நேரத்தில் யாரும் எந்த பிரச்சினை குறித்து பேசுவது கிடையாது. அதைத்தொடர்ந்து ஜீரோ ஹவரில் தான் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். ஆனால் கேள்வி நேரத்தை வேண்டும் என்றே கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சட்டப்பேரவை தலைவரின் இருக்கையையும் முற்றுகையிட்டனர். இருந்தபோதும் அவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதே தவிர வாய்ப்பு மறுக்கப்படவில்லை.
கேள்வி நேரம் முடிந்த பின்பு அவையை ஒத்திவைத்து இப்பிரச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்புண்டு. ஆனால் கேள்வி நேரத்திலேயே விவாதிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அதிமுகவினர் வேண்டும் என்றே கலாட்டா செய்வதற்காக இவ்வாறு செய்கின்றனர். மக்கள் மன்றத்தில் தோற்றதால், சட்டப்பேரவையில் அரசியல் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கின்றனர்,” என்றார்.
சிபிஐ விசாரணைக்கு மறுப்பது ஏன், என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எதற்கு சிபிஐ விசாரணை. இதற்கு முன்னர் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கிறது. பண்ருட்டியில் நடந்த சம்பவத்துக்கு சிபிஐ விசாரணையா நடத்தினர்?. அன்றைக்கு நீதி விசாரணை கமிஷன் அமைத்தார்களா?. ஆனால், திமுக அரசு சிபிசிஐடி விசாரணை, கமிஷன், உடனடியாக நிவாரணம் வழங்கியுள்ளது. இதில் எதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்?
சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்தார், ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறினார். இதனால்தான், திமுக அன்றைக்கு சிபிஐ விசாரணை கோரியது. காவல் நிலையத்தில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டதை முதல்வராக இருந்த எடப்பாடி மறைக்கப் பார்த்ததால், நாங்கள் சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால், நாங்கள் இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக இருக்கிறோம். எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை” என்றார்.