“சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மொத்தமுள்ள 66 ஏக்கர் பரப்பளவிலும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைந்திருக்கும் இடத்தில் சென்னை மாநகரின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க வேண்டும் என்று பசுமைத்தாயகம் அமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில், அந்த இடத்தில் கலை, கலாச்சாரம் மற்றும் வணிக மையத்தை அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. நச்சு வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு ஆர்வம் காட்டாதது கண்டிக்கத்தக்கது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் 36 ஏக்கரிலும், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கரிலும் செயல்பட்டு வருகின்றன. சென்னைக்கு வெளியே கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விட்டதால், பெரும்பாலான பேருந்துகள் கோயம்பேடு வருவதில்லை.
பூந்தமல்லி அருகே கூத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையமும், முடிச்சூரில் கட்டப்படும் ஆம்னி பேருந்து நிலையமும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் போது கோயம்பேட்டில் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் முழுமையாக காலியாகி விடும். அவற்றுடன் கோயம்பேடு சந்தைப் பூங்கா அமைந்துள்ள 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் கிடைக்கும் மொத்தம் 66.4 ஏக்கர் நிலத்தில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியிருந்தேன். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலமுறை நான் கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால், இப்போது கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைந்துள்ள நிலத்தில் 48 ஏக்கர் பரப்பளவில் வணிக மையத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதில் கலை, கைவினைப் பொருட்கள் ஆகியவற்றுக்கான திறந்தவெளி சந்தை, உணவு வளாகம் ஆகியவற்றை ஏற்படுத்தவும், வணிக மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிதி மையத்தை அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் பகுதி மற்றும் அதையொட்டிய நிலங்களை இணைத்து 16 ஏக்கர் பரப்பளவில் பசுமைப் பூங்கா அமைக்கவும் தமிழக அரசு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதாரம், வருவாய் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு பார்த்தால் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரியானதாக தோன்றும். ஆனால், சென்னையின் தற்போதைய தேவை வணிக மையங்கள் அல்ல. தூய்மையான காற்றை வழங்கும் பூங்காக்கள் தான்.
சென்னையில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய்கள், அதீத உடல்பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகிவருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் உடலுழைப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பூங்காக்கள் தேவை. ஆனால், பனகல் பூங்கா, நேரு பூங்கா, திரு.வி.க. பூங்கா, மே தின பூங்கா போன்ற பல பூங்காக்கள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மூடப்பட்டு விட்டன. அதனால், சென்னையின் பசுமைப்போர்வை பரப்பு பெருமளவில் குறைந்து விட்ட நிலையில் அதை ஈடுகட்ட புதிய பூங்காக்களை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். அதுமட்டுமின்றி, சென்னையில் பெரிய பூங்காக்கள் இல்லை. டெல்லியில் மெஹ்ராலி பூங்கா 200 ஏக்கரிலும் லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன.
இவை தவிர புதுடெல்லியின் பதர்பூர் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா 880 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் லால்பாக் பூங்கா 240 ஏக்கரிலும், கப்பன் பூங்கா 100 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சென்னையில் அத்தகைய பூங்காக்கள் இல்லை.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் பகுதியில் 16 ஏக்கருக்கு புதிய பூங்கா அமைக்கப்பட உள்ளதே? என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படலாம். கோயம்பேடு பகுதியில் 7.6 ஏக்கர் பரப்பளவில் உள்ள பூங்காவை 16 ஏக்கரில் விரிவுபடுத்துவதால் எந்த பயனும் இல்லை.
சென்னையில் ஏற்கனவே 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா, 15 ஏக்கரில் உள்ள அண்ணாநகர் கோபுரப்பூங்கா ஆகியவற்றுக்கு இணையாகவே இந்த புதிய பூங்காவும் அமையும். சென்னையின் இன்றைய தேவை மக்களுக்கு தூய்மையான காற்றை அதிக அளவில் தரக்கூடிய மிகப்பெரிய பூங்கா தான். அத்தகைய பூங்காவை அமைக்க கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம் தான் சரியாக இருக்கும்.
காலநிலை மாற்றம் உலகை அழிவின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது. உலகின் அனைத்து நாடுகளும் பேராபத்தில் சிக்கியுள்ளன. வளரும் நாடுகளை காலநிலை மாற்றத்தின் கேடுகள் அதிகம் பாதிக்கின்றன. தமிழகமும் சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல. மாறாக, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்போகும் இடமாக சென்னையும் தமிழகமும் உள்ளதை தமிழக அரசின் அறிக்கைகளே சுட்டிக்காட்டுகின்றன.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்வதறான சரியான தருணம் இதுதான். அதில் ஒரு பகுதியாக கோயம்பேட்டில் பெரிய பூங்காவை அமைக்க வேண்டும். இதனை இப்போது செய்யாமல் போனால், இனி எப்போதும் செய்ய முடியாது. இதனை செய்யத் தவறினால் இன்றைய இளைய தலைமுறையினரும் எதிர்கால தலைமுறையினரும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
சென்னையின் பசுமைப் பரப்பினை அதிகமாக்குவோம் என சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் ஏற்கெனவே வாக்குறுதி அளித்துள்ளன. மாநகரின் 30% முதல் 40% பரப்பளவை 2030ஆம் ஆண்டுக்குள் பசுமைப் பகுதியாக மாற்றுவோம் எனும் வாக்குறுதியை சி40 நகர்ப்புற இயற்கைப் பிரகடனத்தில் (C40 Urban Nature Declaration) சென்னை மாநகராட்சி அளித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2023 ஜூன் மாதம் வெளியிட்ட சென்னை மாநகராட்சியின், சென்னைக் காலநிலைச் செயல்திட்டத்தில் (Chennai Climate Action Plan) சென்னை மாநகரின் தனிநபர் பொதுவெளிப் பரப்பளவை 2030, 2040, 2050ஆம் ஆண்டுகளுக்குள் முறையே 25%, 33%, 40% அதிகமாக்குவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்ந்த லட்சியங்கள் வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், உண்மையாகவே நிறைவேற்றப்பட வேண்டும்.
எனவே, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மொத்தமுள்ள 66 ஏக்கர் பரப்பளவிலும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.