2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் பண்ருட்டியில் 52 பேர் உயிரிழந்தனர். 30 பேரின் பார்வை பறிபோனது. அதற்காக யாராவது ஜெயலலிதாவை ராஜினாமா செய்யச் சொன்னார்களா? என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் 54 பேரை காவு வாங்கியுள்ள கள்ளச் சாராய விவகாரம் தமிழகம் தாண்டி இந்தியாவையே உலுக்கியுள்ளது. இதுதொடர்பாக சாராயம் விற்பனை செய்த கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உட்பட பலரும் கைதாகியுள்ள நிலையில், சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல தமிழ்நாடு முழுக்கவும் கள்ளச் சாராய வேட்டையாடும் போலீஸார், பல ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயங்களை அழித்துள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். மேலும், திமுகவுடன் காங்கிரஸ் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதால் அவர்கள் முக்கிய பிரச்சினையில் பேச மறுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
திமுகவுடன் 25 இல்லை 250 வருடங்கள் ஒப்பந்தம் போட்டாலும் தவறில்லை என எடப்பாடி பழனிசாமியிடம் கூறுங்கள். நாங்கள் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கடந்து போய்விடவில்லை. உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கான கல்வி செலவை ஏற்கிறோம் என முதல் முதலாக காங்கிரஸ்தான் அறிவித்தது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தவில்லை. கள்ளக்குறிச்சியில் காவல் துறையை கண்டித்து பேசியுள்ளோம். இனி வரும் காலங்களில் இந்த கவனக்குறைவு நடக்கக்கூடாது என்று சொல்லிவிட்டுதான் வந்தோம். அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் யாரும் அதனை நியாயப்படுத்தவில்லை. தவறு தவறுதானே.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலும் ஆங்காங்கே 2 மற்றும் 3 பேர் என 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மதுவே இல்லாத குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவையெல்லாம் துக்ககரமாக நிகழ்வுகள். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால், இதை வைத்து அரசியல் செய்து, அரசு நிர்வாகம் சரியில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
முதல்வர் மு.க.ஸ்டாலினை ராஜினாமா செய்யச் சொல்கிறார்களே.. 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் பண்ருட்டியில் 52 பேர் உயிரிழந்தனர். 30 பேரின் பார்வை பறிபோனது. அதற்காக யாராவது ஜெயலலிதாவை ராஜினாமா செய்யச் சொன்னார்களா? அவர்தான் ராஜினாமா செய்தாரா? தமிழக அரசு எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளை இடை நீக்கம் செய்துள்ளது. கள்ளக்குறிச்சியில் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.