கச்சத்தீவு அருகே 18 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று (ஜூன் 23) காலை நடந்த சம்பவம் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனால் மீனவ குடும்பங்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
விசைப்படகு மீனவர்கள் ஐந்தாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்தியா – இலங்கை இடையில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் பிரச்சினை மீனவர்கள் கைது விவகாரம். இதற்கான தொடக்கப் புள்ளி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது என்று அடிக்கடி கூறப்படுவது உண்டு.

சமீபத்தில் 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டி கச்சத்தீவு விவகாரத்தை தமிழக பாஜகவினர் எழுப்ப விஷயம் காரசார விவாதமாக மாறியது கவனிக்கத்தக்கது. கடந்த சில மாதங்களில் தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு ஜூன் 19ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது மீன் பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டன. அதுவரை இலங்கை கடற்படை வசமுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 15, மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 162. மீனவர்கள், படகுகளை மீட்க மத்திய அரசு தூதரக ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.