கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினைதான் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்திய 57 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி சென்னை மாவட்ட அதிமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கள்ளச் சாராய மரணங்களை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கள்ளச் சாராய மரணங்களை தடுக்க கோரியும், தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மெத்தனால் கடத்தல் இரு மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்வாக உள்ளது. இதை சிபிசிஐடியால் எப்படி விசாரிக்க முடியும். அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தினார். சிபிஐ விசாரணை நடைபெற்றால் ஆளும் வர்க்கத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் சிக்குவார்கள். அதற்கு பயந்து சிபிஐ விசாரணையை தவிர்க்கின்றனர். கள்ளச் சாயம் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷன் ஒரு கண்துடைப்பு கமிஷன். இந்த கமிஷனின் நடவடிக்கைகள் கள்ளச் சாராய மரண விவகாரத்தை நீர்த்துபோகச் செய்யும்.
சட்டப்பேரவை ஜனநாயகத்தின் தூண்கள். மக்கள் பிரச்சினைகளை சட்டப் பேரவையில் தான் விவாதிக்க முடியும். ஆனால் இந்த அரசு சட்டப்பேரவையில் விவாதிக்க தயங்குகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் அவர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், பாலகங்கா, முன்னாள் எம்பிக்கள் ஜெ.ஜெயவர்த்தன், விஜயகுமார் முன்னாள் எம்எல்ஏக்கள் தி.நகர் சத்யா, விருகை ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.