1971-இல் தமிழகத்தில் மதுவிலக்கை தூக்கிய திமுக தான், இன்றைக்கு கள்ளச்சாராய விற்பனைக்கும் துணை போய் வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் 3 – 4 வரை பலியாகிய நிலையில், மூன்றே தினங்களுக்குள்ளாக 56 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்து இருக்கிறார்கள். இவர்களில் 4 பெண்களும் அடங்குவர். இதனிடையே, இந்தக் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கள்ளச்சாராய கும்பலுக்கு பின்னால் திமுக நிர்வாகிகள் பலர் இருப்பதாகவும், அவர்களை காப்பாற்ற திமுக அரசு முயற்சி செய்து வருவதாகவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்பதுதான் அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாகவும் உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய மரணம் தொடர்பாக கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை எனத் தெரிவித்தார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும், திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறிய அவர், தமிழ்நாடு போலீஸ் விசாரித்தால் இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்.
மேலும், கள்ளக்குறிச்சியில் 56 உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன் என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், “தமிழ்நாட்டில் 1971-ம் ஆண்டு வரை மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், திமுக அரசு தான், அந்த மதுவிலக்கு சட்டத்தை நீக்கிவிட்டு, மதுவை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது அதே திமுக தான், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் துணையாக உள்ளது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.