கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் அரசின் நிர்வாகத் தோல்வி: டிடிவி தினகரன்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் அரசின் நிர்வாகத் தோல்வி என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை குடித்த 56 பேர் வரை உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளச் சாராயத்தை விற்ற கன்னுகுட்டி (எ) கோவிந்தராஜ், கள்ளச்சாராயம் தயாரித்த சின்னதுரை, மெத்தனால் விற்பனை செய்தவர்கள் உள்பட பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன், இஞ்ச் பை இஞ்சாக வேட்டை நடத்தப்பட்டு, கள்ளச் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தமிழக அரசின் தோல்விதான் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அத்துடன், சிபிஐ விசாரணையும் கோருகின்றன.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சிக்கு நேற்று நேரில் சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அங்கு கள்ளச் சாராயம் அருந்தியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது:-

கள்ளச் சாராய மரணங்களுக்கு அரசு நிர்வாகத்தின் தோல்விதான் காரணம். ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மதுவிலக்கு துறை அமைச்சர் இவர்கள் தான் காரணம். இதில் அதிர்ச்சிதரக்கூடிய செய்தி என்னவென்றால் காவல் நிலையம் பின்புறமே கள்ளச் சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த விஷயம் உளவுத் துறை மூலம் முதல்வர் கவனத்துக்கு சென்று சேர்ந்ததா அல்லது முதல்வர் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக நிர்வாகிகளும் தான் காவல் துறையினரை செயல்பட விடாமல் வைத்திருந்தனர். அப்போது அப்படி நடந்தது என்று எந்த காரணமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லாமல் தமிழ்நாட்டில் இனியாவது கள்ளச் சாராய சாவுகள் நடக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். கள்ளச்சாராய சாவுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும், துறையின் அமைச்சர் முத்துசாமியும் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். இனி இனிபோல நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என்று உறுதியளிக்க வேண்டும். மேலும், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அதுதான் சரியான நடவடிக்கை எடுக்க முடியும். இதன்மூலம் தமிழகம் முழுவதும் கள்ளச்சாரயம் விற்பவர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அரசியல்வாதிகள் திருந்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.