“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குப்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும். ஏற்கெனவே, பிகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் ஜி.கே மணிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினை குறித்து உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் தகுந்த பதிலை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு என்று சொன்னால், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். எனவே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவர உள்ளோம். அதற்கு ஜி.கே.மணி ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுகொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சி உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது “10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் வன்னியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வட மாவட்டங்களில் மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக வன்னியர்கள் பின்தங்கி இருப்பதே காரணம். எனவே அவர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.
அதற்கு இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்திலும் விசாரணை நடந்த போது மக்கள் தொகை மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதாக முதலமைச்சர் மு க ஸ்டாலினும் அமைச்சர்களும் தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்தப் பிரச்சினையை ஜி கே மணி பேசும்போது சாதிவாரி கணக்கெடுப்பிற்கும் மாநில அரசு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் சம்பந்தமில்லை. இரண்டும் தனித்தனியான பிரச்சினைகள் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அவரை பேச அனுமதிக்காததால் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.