தமிழ்நாட்டில் மருந்துக் கடைகளை விட டாஸ்மாக் கடைகளே அதிகம் இருக்கின்றன என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச் சாராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சி , சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மற்றும் இதர பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று (ஜூன் 23) சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக் கல்லூரி பொறுப்பு முதல்வர் நேரு உள்ளிட்ட மருத்துவர்களிடம் விசாரித்தார்.
இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிக்கு வந்த கமல்ஹாசன், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளையும், இந்த சம்பவத்தில் ஒரே பகுதியில் ஒரே நாளில் தந்தை சுரேஷை இழந்த சிறுமி ரஷிதா, தந்தை பிரவீனை இழந்த ஜோஸ்வா, மோசஸ் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் பேசுகையில், “எந்த அரசாங்கங்கள் வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. அரசு கட்டுப்படுத்துவதை காட்டிலும் நாம்தான் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். கல்விக்குத் தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன்’ என அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மதுக்கடைகளுக்கு அருகிலும் அரசு சார்பில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கும் வகையில் ஆலோசனை மையங்களை அமைக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் மதுக்கடைகள் அருகிலேயே விழிப்புணர்வுப் பதாகைகளை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற சம்பவங்களை அரசு மட்டும் கட்டுப்படுத்த முடியாது. குடிக்காதே என்று சொல்ல முடியாது. அளவோடு குடி என்று சொல்லாம். மதுவுக்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்பது போல சிலர் பேசுகின்றனர். அது தவறான கருத்து. மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் ஒழிந்துவிடாது. சாலை விபத்து நடக்கிறது என்பதற்காக ஒட்டுமொத்த போக்குவரத்தையும் நிறுத்திவிட்டால் பிரச்சினை முடிந்து விடுமா? அதை முறைப்படுத்தவே செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மருந்துக் கடைகளை விட டாஸ்மாக் கடைகளே அதிகம் இருக்கின்றன என்பது உண்மைதான். அதை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.