மத்திய அரசின் அலட்சியம் மற்றும் தான்தோன்றித்தனத்தால் நீட் மற்றும் முதுநிலை நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதும் ஒத்திவைக்கப்படுவதும் நிகழ்ந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் காணப்பட்ட முறைகேடுகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு 2024-ஆம் ஆண்டு 23.33 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய நிலையில், 13.16 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றனர். இதில் தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்களைச் சேர்ந்த 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள், அதாவது 720-க்கும் 720 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். கடந்த ஆண்டுகளில் முழு மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் ஒன்று அல்லது இரண்டாக இருப்பார்கள். இதுவரை இல்லாத வகையில் 67 பேர் எப்படி முழு மதிப்பெண்கள் எடுத்தனர் என்று புரியவில்லை. மேலும் அரியாணா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஆறு மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதுவும் வழக்கத்துக்கு மாறானது என்று ஐயம் எழுந்தது. பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வின் கேள்வித் தாள் கசிந்த செய்திகள் வெளியாயின. இத்தகைய சூழலில்தான் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்தது. நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருந்தது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் என நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த முறைகேடுகளால் தேசியத் தேர்வு முகமையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. இதனால் பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்குகள் குவிந்துள்ளன. பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என முதலில் மத்திய அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் பிறகு மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு ஜூன் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம், ‘நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது ஒருவர் அதாவது 0.001% அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும். தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறும் சூழலை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற குழந்தைகள் கடினமாக படிக்கின்றனர் என்பதை யோசித்துப் பாருங்கள். மோசடி செய்த ஒருவர் மருத்துவராக மாறுவதை கற்பனை செய்து பாருங்கள்’ என கடுமையாகச் சாடியது. இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசியத் தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், வினாத்தாள் கசிவு, முறைகேடு வழக்கின் விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளின் தொடர்ச்சியாக நேற்று ஜூன் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக சனிக்கிழமை இரவு 9 மணிக்கு அறிவிக்கப்பட்டது. நாட்டில் 297 நகரங்களில் நடைபெற இருந்த தேர்வில் 2,28,757 மாணவர்கள் கலந்து கொள்ள தயார் நிலையில் இருந்தனர் . ஆனால் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வரும் மத்திய பாஜக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்துக்கு உரியது. நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் மட்டும் எழுப்பப்பட்டக் குரல் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு மத்திய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.