சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் பேசியதற்கு எதிராக கர்நாடகாவின் பெங்களூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றார். ஆனால் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பாஜக பொய்யான தகவலைப் பரப்பியதால் பெரும் சர்ச்சையாக நாடு முழுவதும் வெடித்தது. உதயநிதியின் சனாதன தர்மம் ஒழிப்பு பேச்சுக்காக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடகா மாநிலம் பெங்களூர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக மூக ஆர்வலர் பரமேஸ் பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினை ஜூன் 25-ந் தேதி நேரில் ஆஜராக பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இன்று பெங்களூர் 42-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜரானார். இன்றைய விசாரணையின் போது அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக சென்னை மாநாட்டில் சனாதன தர்மம் ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி பேசுகையில், ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பது நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்’ என்று பேசியிருந்தார்.