தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஸ்டாலின் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் கிராமத்தில் கடந்த 20ஆம் தேதி ஒரு துக்க வீட்டில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல்நல பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் குடித்த சாராயம் விஷத்தன்மையுடன் இருந்தது. இதனால் அளவுக்கு மீறி சாராயம் குடித்தவர்களில் இதுவரை 60 பேர் பலியாகிவிட்டனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சத்தை நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை அரசியல் கட்சியினர் போய் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். பெரும்பாலானோரின் விருப்பம் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்குக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-
ஜூன் 20 ஆம் தேதி நான் கருணாபுரத்திற்கு சென்றேன். அங்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தேன். 12 குடும்பங்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. அங்கேயே தங்கிய நான் அடுத்த நாள் அதாவது 21 ஆம் தேதி நள்ளிரவு வரை கள்ளக்குறிச்சியில் உள்ள பாதிக்கப்பட்ட கிராமங்களில் மக்களை சந்தித்தேன். ஏறத்தாழ 57 குடும்பங்களையும் சந்தித்தேன். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் கோரிக்கை என்னவென்றால் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் என கைகூப்பி கேட்டனர். கள்ளச்சாராயத்தை ஒழியுங்கள் என அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அதனால்தான் சிறுத்தைகளின் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.
கணவன், மனைவி இருவருமே இறந்த வீட்டிற்கு போயிருந்தேன். அங்கு அந்த கணவர் சுரேஷ் தினமும் காலை 5.30 மணிக்கெல்லாம் சாராயம் குடிப்பார் என அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் அவருடைய மனைவிக்கும் குடிப்பழக்கம் இருந்ததா என நான் கேட்ட போது அவர்கள் சொன்னது வேதனையாக இருந்தது. அந்த பெண்ணுக்கு பவுத்திரம். இதனால் காலை கடன்களை கழிக்க முடியாது. இதனால் ஓம வாட்டர் குடித்தால் நல்லது என நினைத்து தனது மகளை கடைக்கு அனுப்பினாராம். அந்த சிறுமியும் வெளியே சென்றுவிட்டார். கணவர் சுரேஷ் இரு சாராய பாக்கெட்டுகளை வாங்கி வைத்துள்ளார். ஒரு பாக்கெட் சாராயத்தை டம்ளரில் ஊற்றி குடித்துவிட்டு மீதமுள்ள பாக்கெட்டையும் பிரித்து டம்ளரில் ஊற்றிய போது போன் வரவே அதை பேச வெளியே சென்றுவிட்டார். இதையடுத்து அங்கு வந்த அவருடைய மனைவி வடிவு, அந்த சாராயத்தை ஓம தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார்.
கள்ளச்சாராய விவகாரத்தில் அண்ணாமலையும் எடப்பாடியும் திமுக அரசை விமர்சிக்கிறார்கள். இதற்காக நான் திமுகவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. இது உழைக்கும் மக்களின் பிரச்சினை! மதுவால் மனித ஆற்றல் அழிகிறது. போதை குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான் குடிக்கு அடிமையாவதற்கு காரணம். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மகளிர் மட்டும் பங்கேற்கும் மகளிர் மாநாட்டை நடத்த இருக்கிறோம். 5 லட்சம் பெண்களை திரட்டுவோம். மாநில அரசுக்கு எதிராகவோ ஆளும் கட்சிக்கு எதிராகவோ நடத்தவில்லை. இந்தியாவில் மனித வளத்தை பாதுகாக்க நடத்தப்படும் ஒரு நிகழ்வு. தமிழக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள்- உங்களுக்கு மிகப் பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காலமெல்லாம் உங்கள் பெயர் இந்த மண்ணில் போற்றப்படும். இதற்கு டாஸ்மாக் கடைகளை மூடுவது என துணிந்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.