குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக ஆளுநர் பேசியதாக போலி செய்தி: ஆளுநர் மாளிகை!

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக சமூக வலைதளங்களில் ஒரு போலி செய்தி பரவுகிறது. அந்த செய்தியில், ‘தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குல தெய்வங்கள்தான். சாராய உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமான குல தெய்வ, நாட்டார் தெய்வ, கிராம கோயில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும்’ என ஆளுநர் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆளுநர் மாளிகைக்குபொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.

சமூக வலைதளங்களில் பரவும் இந்த செய்தியை ஆளுநர் மாளிகை முற்றிலும் மறுக்கிறது. தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் மக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. அமைதியின்மையை உருவாக்குகிறது. இந்த போலியான தகவலை பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் மாளிகை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.