கள்ளக்குறிச்சி 61 பேர் பலி: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு!

61 பேரை பலி கொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அதிமுக மற்றும் பாமக தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று ஜூலை 3-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 59 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர். அப்போது அவர்கள், விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். விஷச் சாராய விற்பனை உள்ளாட்சி அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடக்காது என்பதால், அவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தமிழக அரசுத்தரப்பில் வழக்கறிஞர் முனியப்பராஜ், விஷ சாராய விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மதுவிலக்கு துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

அந்த விசாரணைக்குப் பின்னர் விழுப்புரம், மரக்காணம் சம்பவங்களுக்கு பிறகு விஷச் சாராய விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் எனவும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே பாமக செய்தித் தொடர்பாளரும் சமூக நீதி வழக்கறிஞர்கள் பேரவையின் தலைவருமான கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், கள்ளச்சாராய மரணத்தை கள்ளக்குறிச்சி முன்னாள் ஆட்சியர் மறைப்பதற்கு முயற்சித்துள்ளார். மேலும் புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் இருந்து எத்தனால் வாங்கி வந்துள்ளனர். இதனால் தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் வெளிமாநிலம் சென்று விசாரிக்க முடியாது. ஆகையால் சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வு முகமையை கொண்டு விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஏற்கனவே அதிமுக தொடர்ந்த வழக்கு புதன்கிழமை (இன்று) விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது என்றார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதிமுக தாக்கல் செய்த வழக்குடன் பாமக வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். இந்த வழக்குகளில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசின் அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கவேண்டும். அதனால் வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், வழக்கில் உடனடியாக புலன் விசாரணையை நடத்த வேண்டும். புலன் விசாரணையை உரிய நேரத்தில் துவங்காவிட்டால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும். விசாரணை வீணாகி விடும் என பாமகவின் கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஒவ்வொரு ஆண்டும் விஷ சாராய மரண சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதுசம்பந்தமான வழக்குகளில் தாமதமான விசாரணை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனர். அதனால் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஜூலை 3-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.