சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
சட்டப்பேரவைக்கு தொடர்ந்து கறுப்புச் சட்டையில் வந்த அதிமுகவினர், இன்றும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்துக்கு பின் பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு கூறிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டதால் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பேரவை விதிகளின்படி சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
முன்னதாக, அவை முன்னவர் துரைமுருகன் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார். அப்போது பேசிய துரைமுருகன், “பிரச்சினையை சட்டப்பேர்வையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி உள்ளோம். கறுப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” என்றார்.
இதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “விளம்பர நோக்கோடு அதிமுக செயல்படுகிறது. வீண் விளம்பரம் தேடுவதில் தான் அதிமுக முனைப்பாக உள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க அரசு தயாராக உள்ளது. மக்கள் பிரச்சினையை அவையில் பேச வாய்ப்பளிக்கப்படும் எனக் கூறியும் ஏற்க மனமில்லாமல், அதிமுக வெளியில் சென்று பேசுவது சட்டசபை மாண்பல்ல” என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.