கள்ளச் சாராய சம்பவம் சமூகத்தில் நிகழ்ந்துள்ள ஒரு மிகப் பெரிய கொடூரம்: கே.பாலகிருஷ்ணன்

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை சமூகத்தில் நிகழ்ந்துள்ள ஒரு மிகப் பெரிய கொடூரமாகவே பார்க்கின்றோம். ஆனால், ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் ஆதாயம் தேடும் கருவியாக இந்தச் சம்பவத்தை பார்க்கவில்லை” என கள்ளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

நெஞ்சை உலுக்கும் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் சாவுகள், அரசியல் அதிகார வர்க்கம் – காவல்துறை கூட்டணி, உண்மையான கிரிமினல் மீது உறுதியான நடவடிக்கை எடு, கள்ளச்சாராய போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்திட தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற முழக்கங்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள ஒரு கோர கொடூரமான சம்பவம் இன்றைக்கு தமிழகத்தை மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கி கொண்டிருக்கின்றது. இச்சம்பவத்தை அரசியலாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பல கட்சிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சிபிஎம் பொறுத்தவரையில் இது சமூகத்தில் நடந்துள்ள ஒரு மிகப்பெரிய கொடூரமாகவே பார்க்கின்றோம். ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் ஆதாயம் தேடும் கருவியாக இந்த சம்பவத்தை பார்க்கவில்லை. இங்கே விற்று இருக்கிற இந்த விஷ சாராயத்தை அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல பேர் மருத்துவமனையில் அபாய நிலையில் இருக்கின்றனர்.

மேலும், இதில் உயிரிழப்புகள் நடக்குமா இல்லையா என்பதை மருத்துவர்களாலேயே கணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அப்படியே அவர்கள் உயிர் பிழைத்து வந்தாலும் கூட அவர்கள் முழு உடல் நலத்துடன் இருப்பார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்களுக்கு முதலில் அவர்கள் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

கள்ளச் சாராயம் குடித்து இறந்தது சமூகத்தில் குற்றம் என்றாலும் கூட இந்த குற்றத்தை செய்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமையாக இருப்பதனால் இதனை உணர்ந்து தமிழக முதல்வர் அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு மதுக்கடைகளை உடனே மூடவில்லை என்றாலும், படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். படிப்படியாக மதுவிலக்கை தமிழகம் முழுவதும் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். ஓர் ஆண்டில் மட்டும் 298,420 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டதாக அரசாங்க புள்ளி விவரம் கூறுகிறது. தமிழக அரசுக்கு வருமானத்திற்கு எத்தனையோ தொழில்கள் இருக்கிறது. மணல் வியாபாரத்தை அரசாங்கமே ஏற்று நடத்தலாம். கனிம வள வியாபாரத்தை மொத்தமாக அரசாங்கமே ஏற்று நடத்தலாம். எத்தனையோ தொழில் வளங்களை தமிழகத்தில் பயன்படுத்தலாம். அதையெல்லாம் பயன்படுத்தினால் அரசாங்க கஜானாவிற்கு பணம் வர வழி உள்ளது. ஆனால் டாஸ்மாக் வியாபாரத்தை தமிழக அரசு தொடர்ந்து கொண்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சாராய வியாபாரி கண்ணுக்குட்டியை ஏதோ சர்வதேச சாராய வியாபாரியை பிடித்தது போல் சித்தரிப்பது கேலிக்கூத்தாக உள்ளது. இதற்கு பின்னால் இருக்கக் கூடிய அரசியல் பலம் வாய்ந்த சக்திகளையும் சேர்த்து கைது செய்திருக்க வேண்டும். இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள் யார் அரசியல் செல்வாக்கு இன்றி இந்த பகுதியில் தனி மனிதர்களாக சாராயம் விற்க முடியுமா? கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவது காவல் துறைக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. தெரியாமல் எப்படி சம்பவம் நடைபெற்று இருக்கக்கூடிய காவல் துறையும் இதில் சம்பந்தப்பட்டே இருக்கலாம். எனவே சம்பந்தப்பட்ட அனைத்து துறை சார்ந்தவர்களையும் இதில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கோரிக்கையாக உள்ளது. இதுவரையில் உயர் மட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள் யாரையும் கைது செய்யாமல் வெறும் சாராயம் பெற்றவர்களை மட்டும் கைது செய்திருப்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழகத்தில் இனி எந்த வகையிலும் போதை பழக்கத்தை அனுமதிக்க முடியாது. இந்த கோர சம்பவத்திற்கு பிறகு கூட கள்ளக்குறிச்சி பகுதியில் இருப்பவர்கள் போதை பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக மாறித்தான் ஆக வேண்டும். சாராயம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.