“தமிழகத்தில் ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய சட்ட ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறப்பு சட்டம் ஒன்றைத் தமிழக அரசு இயற்றவேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில் 2012-ம் ஆண்டு இந்திய சட்ட ஆணையம், ‘சட்டவிரோதக் கூட்டம் ( திருமண சுதந்திரத்தில் தலையிடுதல் ) தடுப்புச் சட்டம்‘ என்ற சட்ட மசோதாவை உருவாக்கியது. ஆனால் அந்த மசோதாவை சட்டமாக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகார வரம்பின்கீழ் வருவதால் அந்த சட்ட மசோதாவைத் தமிழக அரசு சட்டமாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
2018ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், நீதிபதி டி.ஒய்.சந்த்ரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு மத்திய அரசு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என உத்தரவிட்டிருப்பதோடு அப்படி சட்டம் இயற்றும்வரை மத்திய அரசும், மாநில அரசுகளும் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பட்டியலிட்டிருந்தது.
‘வயதுவந்த இருவர் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தால் அதற்கு குடும்பத்தின் அனுமதியோ, சாதி, சமூகம் ஆகியவற்றின் அனுமதியோ தேவை இல்லை’ எனத் தெளிவாகக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை அளித்திருக்கிறது.
* ஆணவக் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளை மாநில அரசுகள் உடனடியாகக் கண்டறிய வேண்டும். அந்தப் பகுதிகளின் காவல் அதிகாரிகளுக்கு அதுகுறித்து விழிப்போடு இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும்; அந்தப் பகுதிகளில் எங்காவது சாதிப் பஞ்சாயத்து அல்லது சாதிக் கூட்டம் கூடுவதாக செய்தி கிடைத்தால் அதை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டும்; செய்தி கிடைத்ததும் டிஎஸ்பி மட்டத்தில் உள்ள அதிகாரி அந்தப் பகுதிக்குச் சென்று சாதிப் பஞ்சாயத்து அல்லது சாதி கூட்டம் கூடக்கூடாது என மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
அதையும் மீறி சாதி பஞ்சாயத்து நடந்தால் அங்கேயே டிஎஸ்பி இருக்கவேண்டும்; அந்தப் பஞ்சாயத்தின் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவேண்டும்; அந்த கூட்டம் சட்டவிரோதமான முடிவுகளை எடுப்பதற்காகத்தான் கூடுகிறது என டிஎஸ்பி சந்தேகித்தால் அதைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம்; பிரிவு 151ன் கீழ் கைதும் செய்யலாம். ஆணவக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
* தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி சாதி பஞ்சாயத்து அல்லது சாதி கூட்டம் கூட்டப்பட்டால் ஐபிசி பிரிவுகள் 141, 143, 503 மற்றும் 506ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் கலப்பு மணத் தம்பதியினரைப் பதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய கலப்பு மணத் தம்பதியினர் பாதுகாப்போடு இருப்பதற்கு ஏற்ற பாதுகாப்பு இல்லங்களைத் துவக்குவது குறித்து மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும்; கலப்பு மணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப்படியான வயதை எட்டியவர்களாக இருந்தால் அந்தத் திருமணம் நடைபெறுவதற்கான பாதுகாப்பைக் காவல்துறை தரவேண்டும்; தங்களது திருமணத்தை கௌரவத்தின் பெயரால் அவர்களது சாதியினரோ, குடும்பத்தினரோ, மற்ற எவருமோ எதிர்ப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் அதை டிஎஸ்பி விசாரித்து எஸ்பிக்கு அறிக்கை அளிக்கவேண்டும்; அந்த அறிக்கையின் அடிப்படையில் எஸ்பி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஆணையிடவேண்டும்.
* இந்த வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறையைச் சேர்ந்தவர்களோ மாவட்ட அதிகாரிகளோ பின்பற்றத் தவறினால் அதை வேண்டுமென்றே செய்த தவறாகக் கருதி அவர்கள்மீது உரிய துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்படவேண்டும்; ஆறுமுகம் சேர்வை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலப்பு மணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட அதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநிலஅரசுகள் உருவாக்கவேண்டும். இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ‘ஹெல்ப்லைன்’ வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும். இவ்வாறு கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட நடைமுறைகளை 2021 வரை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதன்பின்னர் திமுக அரசு பொறுப்பேற்றதும் விசிக சார்பில் முதல்வர் ஸ்டாலினிடம் கடிதம் மூலம் இதை சுட்டிக் காட்டினோம். முதல்வர் தலைமையில் மாநில அளவிலான விழிப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் 2021 ஆகஸ்டில் நடைபெற்றபோது அங்கும் இதை எழுத்துபூர்வமாக முன்வைத்தோம். தற்போது நெல்லை சிபிம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தையே சாதி ஆணவக் குற்றவாளிகள் தாக்கிய அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கும் நிலையில், சாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும் எனவும், அதுவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.