கள் இறக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் உள்துறைச் செயலாளர் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ள நிலையில் கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனையிலிருந்து கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துளளார். அதில் பனை மரங்களின் அழிவிற்கு முக்கியக் காரணமே கள் எடுக்க அரசு விதித்துள்ள தடைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பனை தொழில் செய்ய முடியாமல் விவசாயத் தொழில்களை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக உள்துறை செயலாளர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பனை மரம், தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் தடை செய்யப்பட்ட கள்ளிற்கு மீண்டும் உரிமம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீராவுக்கு அனுமதி வழங்குவதாக 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. கள்ளில் 4.5 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். எவ்வளவுதான் புளிக்க வைத்தாலும் அதன் ஆல்கஹாலின் அளவு 13 க்கு மேல் செல்லாது. ஆனால் டாஸ்மாக் மதுவில் ஆல்கஹாலின் அளவு 42 இருக்கிறது என தென்னை விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.