மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ராகுல் காந்தி!

நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர் நாற்காலியில் அமரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரேபரேலி மக்களவை தொகுதி உறுப்பினராக கையில் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்துடன் நாடாளுமன்றத்தில் நேற்று ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார். இந்த சூழலில் மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நேற்று நடந்த இந்தியா கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கடிதத்தை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் இதே கோரிக்கையை மூத்த தலைவர்கள் முன்வைத்தனர். அதனை பரிசீலிப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். தற்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கேபினட் அந்தஸ்திற்கு இணையானது. சிபிஐ இயக்குநர், அமலாக்கத்துறை இயக்குநர், தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோரை தேர்வு செய்யும் முக்கியமான பதவியாகும். அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அழைத்து செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு கொண்டது.