பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“முல்லைப் பெரியாறு, காவிரி – மேகேதாட்டு, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழகத்தில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழகத்தின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழகத்தின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.

முல்லைப் பெரியாறு, காவிரி-மேகேதாட்டு, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம். பாலாற்றில் தமிழகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பாலாற்றில் புதிய அணை கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு. பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் சந்திரபாபு நாயுடு பேசினார். அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

8 வது முறையாக என்னை தேர்வு செய்தற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை தேர்வு செய்தற்கு கைமாறாக இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்ய இருக்கிறேன். ஆந்திர மாநிலத்தை கஞ்சா போன்ற போதை பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன். பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும். ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு ஆகும். அதனை பொன்னாக மாற்றுவது உங்கள் பொறுப்பு” என்றார்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது, பாலாற்றின் குறுக்கே சந்திரபாபு நாயுடு தடுப்பணை கட்ட முயற்சி செய்தார். இதற்கு ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றில் ஏற்கனவே 20 க்கும் மேற்பட்ட சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பாலாற்றின் கிளை ஆற்றிலும் தடுப்பணைகளை ஆந்திர மாநில அரசு கட்டி வைத்துள்ளது.

முன்னதாக கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார். ஆந்திர அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இத்தகைய சூழலில் தான் மீண்டும் பாலாறு விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள நந்திமலையில் உருவாகும் பாலாறு தமிழகத்தில் 222 கி.மீ ஓடி வயலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. இந்த ஆறு கர்நாடகாவில் 90 கி.மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 45 கி.மீ., தொலைவுக்கும் பயணிக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 127 கி. மீட்டர் தொலைவுக்கு பாலாறு செல்கிறது. பாலாற்றில் ஆந்திரா கட்டியுள்ள தடுப்பணைகளால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், பாலாற்று நீரை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த சூழலில் தற்போது, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதற்கு, தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பு இருக்கிறது.