சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதம்!

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்துபேரவையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்து சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்தவிவகாரம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவை தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பேரவையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்து எழும்பூர்ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்நடத்த உள்ளனர்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டப்பேரவையில் விதி எண் 56-ன்படி, அவையை ஒத்திவைத்து விவாதிக்க தீர்மானம் கொடுத்தோம். இதற்காக, பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டு எங்கள் கட்சி கொறடா மனு கொடுத்துள்ளார். நேற்றைய தினம் சட்டப்பேரவையில், விதியின்படி நாங்கள் நடந்து கொண்டால் சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி அளிப்பதாக பேரவைத் தலைவர் கூறினார். ஆனால், இன்று விதிப்படி அவர் நடக்கவில்லை.

பேரவைத் தலைவர் நடுநிலையாக செயல்படவில்லை. மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி பிரச்சினையின் ஆழத்தைக் கருத்தில் கொண்டு அதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவது எதிர்க்கட்சி என்ற முறையில் எங்களுக்கு பிரதான கடமை உள்ளது. பேரவைத் தலைவர் அரசியல் பேச முற்படுகிறார். அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு அரசியல் பேசுவது முறை அல்ல. அதை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்து அரசியல் பேச வேண்டும்.

அதிமுக ஆட்சி இருக்கும்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தபோது, அதனை தீர ஆய்வு செய்து 2020 டிச.21-ம் தேதியன்று அதிமுக ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அது அப்படியே நின்று விட்டது. திமுக இன்றைக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு காரணம் விக்கிரவாண்டி தேர்தல். வன்னியர் மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய அத்தொகுதியில் அவர்களின் வாக்கைப் பெறுவதற்காக அவசர அவசரமாக சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வருகிறார்கள். சம்பிரதாயத்துக்காக திமுக அரசு பேரவையை நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.