கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின்!

அரசியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சாதனைகளை அவரே முறியடித்துக் கொண்டிருப்பதாக சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாடு, இளைஞர் நலம், சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட துறையின் கீழ் மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்து உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

விளையாட்டு என்றால் ஒருசிலரின் பெயர்கள்தான் வரலாற்றின் நிலைத்து நிற்கும். ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்டு, கிரிக்கெட் என்றால் மகேந்திர சிங் தோனி. இவர்களின் சாதனைகளை இவர்களே முறியடித்துக் கொள்வார்கள். அதுபோன்று அரசியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் சந்திக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் முந்தைய தேர்தலைவிட வெற்றியை குவித்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் 40-க்கு 40 பதக்கங்களையும் வென்று சாம்பியன் பட்டத்தை திமுக கூட்டணி வென்றுள்ளது.

இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் இருப்பது போல், தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையமும் நம்பர் 1 இடத்தை நோக்கி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தாண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பணிகள் இந்தாண்டே தொடங்கும்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை நகரங்களில் 12 நாட்கள் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் இந்தியா முழுவதும் 5630 வீரர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய பிரதமரும், நமது மாண்புமிகு முதலமைச்சரும் விளையாட்டு துவக்க போட்டியில் கலந்து கொண்டு பாராட்டினார்கள். ஒன்றிய பிரதமர் குறிப்பாக, ‘இவ்வளவு சிறப்பான கேலோ இந்தியா நிகழ்ச்சியை நான் எங்கும் பார்த்தது இல்லை’ என்று கூறினார்.

இந்த நேரத்தில் இன்னும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த ஒன்றிய அரசு சென்ற வருடம் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு கொடுத்த நிதி 25 கோடி, தமிழ்நாட்டுக்கு கொடுத்த நிதி வெறும் 10 கோடி. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில், தமிழ்நாட்டு மாணவர்கள் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்தனர். கேலோ இந்தியா பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு முதல்முறையாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்து உள்ளது.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை பொறுத்தவரை 15 பிரிவுகளில் நடந்த போட்டிகளில் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டும் அதிக வீரர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுப்போம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கூடுதல் விளையாட்டு போட்டிகள் சேர்க்க வேண்டும் என்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, இந்த ஆண்டு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.