மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத தமிழக அரசு மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என முதல்வர் கூறியுள்ளார். வன்னியர்களின் வாக்குகளை வாங்கிய திமுக இடஒதுக்கீடு மூலம் பிரதிநிதிதுவம் பெறுவதை திமுக விரும்பவில்லை. இதற்கு திமுக சொல்லும் காரணம் சரியானது அல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளதை புள்ளிவிவரங்களின் மூலம் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று திமுக கூறியதை பாமக, வன்னியர் சங்கம் ஏற்காது. இதற்காக நான் மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளேன். தற்போது வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்க கோரி மாபெரும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும். 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சிவ சங்கர் கூறியுள்ளார். இப்படி ஒரு பொய்யான தகவலை அவர் கூறியுள்ளார்.
உயர்கல்வித்துறை வெளியிட்ட சுற்றரிக்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படாமல் இருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (வன்னியர்) வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து முழுமையான தகவல்களை உள்வாங்கி பேசி இருக்கவேண்டும். தவறான தகவல்களை கூறி மக்களை குழப்பியுள்ளார். சாதிவாரி கணகெடுப்பை மாநில அரசு நடத்தமுடியாது என்று முதல்வர் கூறியுள்ளார்.2008 ஆம் ஆண்டு புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி எந்த ஒரு மாநில, யூனியன் பிரதேசமோ புள்ளிவிவர கணக்கெடுப்பின் மூலம் முழுமையான விவரங்களை திரட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது.
பிகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு செல்லும் என நீதிமன்றம் சொல்லியுள்ளது. பொய்யான காரணங்கள் கூறுபதை முதல்வர் தவிர்க்கவேண்டும். பிகார் மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பை எந்த நீதிமன்றமும் தவறு என்று சொல்லவில்லை.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சினையை பாமக எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவருவார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். இது குறித்து பாமக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம். சாராயத்தை அறியாமல் இருந்த ஒரு தலைமுறைக்கு 1972 ம் ஆண்டு அறிமுகம் செய்தது திமுகதான் காரணம். எனவே முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறைவு. குவிண்டால் ஒன்றுக்கு ரூ 800 உயர்த்திதர வேண்டும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டலாம் என்று கூறியது இரு மாநில உறவை கெடுக்கிறது. 22 அணைகள் கட்டியபின்பு இனி அணை கட்டினால் பாலாறு பாலைவனமாகும். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதில்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. சட்டப்பேரவை 100 நாட்கள் நடத்தவேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகளை அடுத்தகூட்டத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யவேண்டும். இடஒதுக்கீடு கேரளாவில் அனைவருக்கும் கொடுக்கிறார்கள். இங்கும் தொகுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.