தமிழகத்தில் மணல் கடத்தல் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதமும் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் மணல் கடத்தல் விவகாரத்தில் மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்தில் சுமார் ரூ 4,730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஏற்கெனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. மணல் குவாரிகளில் ஏற்கெனவே மத்திய புலனாய்வுத் துறை அமைப்புகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை சேகரித்துள்ளன. இந்த நிலையில் அமலாக்கத் துறை, தமிழக டிஜிபிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பணப்பரிவர்த்தனை முறைகேடு தடுப்புச் சட்டம் பிரிவின் படி இந்த கடிதத்தை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. அதில் கடந்த 9 மாதங்களாக அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் தமிழகத்தில் 2023- 2024 ஆம் காலகட்டத்தில் சட்டவிரோதமாக 23.64 லட்சம் யூனிட் மணல் கொள்ளை நடந்துள்ளது. குத்தகைக்கு விடப்பட்ட மணல் படுகைகளில் மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலமாக தனியார் ஒப்பந்ததாரர்கள் எப்படி மணலை சட்டவிரோதமாக எடுத்தனர் என்பது குறித்து விரிவான தகவல்களையும் அமலாக்கத் துறை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை விட 10 முதல் 30 மடங்கு அதிகமாக மணல் எடுத்துள்ளனர். ஒரே இடத்தில் 4.9 ஹெக்டேரில் மணல் எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. 5 மாவட்டங்களில் 190 ஹெக்டேரில் பரப்பளவில் 28 இடங்களில் மணல் எடுக்க குத்தகைதாரர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டவிரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவுக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் ஆளில்லா விமானங்களால் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் தெரியவந்தது. மாநில அரசின் நீர்வளத் துறை அனுமதி அளித்துள்ள குவாரிகளில் மணல் கொள்ளை நடந்துள்ளது.
இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் குவாரிகளில் மணல் எடுக்க அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களை வைத்து உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள ஐஐடி நிபுணர்கள் உதவியுடன் அறிவியல் பூர்வமாக எந்த ஆழத்திற்கு எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என ஆய்வு நடத்தப்பட்டது. தொடர் விசாரணையில் அரசு 490 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் 2,450 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.