சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு விருப்பம் இல்லையா?: அண்ணாமலை!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்புக்காக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குலசேகரன் தலைமையில் முந்தைய அரசு ஆணையம் அமைத்தது. அதன்பிறகு ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக, ஆணையத்துக்கு 6 மாதம்கூட கால நீட்டிப்பு வழங்கவில்லை. அப்படி வழங்கியிருந்தால் தமிழகத்துக்கு தற்போது சாதிவாரியான புள்ளிவிவரங்கள் இருந்திருக்கும். ஏன் அவ்வாறு கால நீட்டிப்பு வழங்கவில்லை என்பதை தமிழக மக்களுக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி, கடந்த 2011-ம் ஆண்டு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் உதவியுடன் மாநில அரசுகள் மூலமாக சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த பணிகள் 2013-ம் ஆண்டு 99.3 சதவீதம் முடிவடைந்த போதிலும், கணக்கெடுப்பு விவரங்களை மத்திய காங்கிரஸ் அரசு வெளியிடவில்லை என்பதையும் தமிழக முதல்வருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.