அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, 4700 கோடிக்கு தமிழக மக்களின் மண் வளம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் இதை இந்த விவகாரம் பற்றி விவாதத்திற்கு எடுத்து கொள்ள சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார் என வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இன்றைய தினம் சிறு குறு நடுத்தர தொழில்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை, மதுவிலக்கு, காவல் துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பதில் அளித்து பேசி புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-
நீட் தேர்வு தொடர்பான முதலமைச்சரின் தீர்மானத்திற்கு உரிய விளக்கத்தை அளித்து உள்ளோம். தமிழ்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளை குறித்து நேற்று மாலை கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து இருந்தோம். தமிழ்நாட்டில் மணல் கொள்ளை நடந்து வருகின்றது. இது பற்றி அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, 4700 கோடிக்கு தமிழக மக்களின் மண் வளம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் இந்த விவகாரம் பற்றி விவாதத்திற்கு எடுத்து கொள்ள சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
மதுக்கடைகளை வருமானத்திற்கு அரசு நடத்துகின்றது. இன்னொரு புறம் மாநில இயற்கை வளமான மணல் கொள்ளை போகின்றது. சுற்றுப்புற சூழல், புவி வெப்பமயமாதல், நீராதார பிரச்னை, விவசாய பிரச்னைகளுக்கு மணல் முக்கியமானதாக உள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட மிக அதிகமான அளவில் மணல் கொள்ளை நடந்து உள்ளது. அரசுக்கு வருமானம் வராமல், இடையில் உள்ளவர்கள் கோடிக்கணக்கில் சாப்பிட்டுவிட்டனர்.
தமிழ்நாடு இந்தியாவிலேயே நெம்பர் ஒன் மாநிலம் என உள்ளே பேசுபவர்கள் ஏன், இது பற்றி விவாதிக்க மறுக்கின்றனர். மாநில சுயாட்சி பற்றி பேசும் திமுக தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பி பதில் கேட்பது குறித்து ஏன் அரசு பதில் தர மறுக்கின்றது. அமலாக்கத்துறை எடுக்கும் நடவடிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் காலி கப் கொடுத்து உள்ளனர். வரக்கூடிய காலங்களில் இந்த காலி கப்பில் மணல் நிரப்பி எதிர்கால தலைமுறைக்கு இதுதான் மணல் என காட்டாமல் இருக்கும் சூழலை அரசு எற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.