காங்கிரஸின் தமிழர்கள் மற்றும் தமிழ் மரபுக்கு எதிரான சுயரூபமும் வெளிவந்துள்ளது: டிடிவி தினகரன்

மக்களவையில் இருக்கும் செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி கட்சி எம்.பி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், காங்கிரஸின் தமிழர்கள் மற்றும் தமிழ் மரபுக்கு எதிரான சுயரூபமும் வெளிவந்துள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிசம் கடந்த ஆண்டு மே மாதம் திறந்துவைக்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழகத்தில் இருந்து 20 ஆதீனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட செங்கோல் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்திலேயே மன்னராட்சியில் தான் செங்கோல் வழக்கம் நடைமுறையில் இருந்தது. மக்களாட்சி நடக்கும் சூழலில் நாடாளுமன்றத்தில் எதற்காக செங்கோல் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக கேள்விகளை எழுப்பி இருந்தன. ஆனால், செங்கோல் என்பது தமிழ்நாட்டில் பெருமை என விளக்கம் அளித்தது பாஜக.

தற்போது சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.செளத்ரி, செங்கோல் என்பது முடியாட்சியின் சின்னமாகும் என்றும், மன்னர்கள் கையில்தான் அது இருக்கும் என்று தெரிவித்ததோடு, நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும். செங்கோலுக்குப் பதில் அரசியலமைப்பின் பிரதியை அங்கு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாடாளுமன்றத்தில் நீதியின் அடையாளமாக நிறுவப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்கிற சமாஜ்வாதி கட்சியுடைய கோரிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது. நடுநிலை ஆட்சி வழங்குவதன் அவசியத்தை உணர்த்தும் செங்கோலுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கும் உயரிய மரியாதை, தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமையடையச் செய்திருக்கிறது.

மக்களவையில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை வைக்க வேண்டும் என்று கோர சமாஜ்வாதி கட்சிக்கு முழு உரிமை உண்டு. இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான செங்கோலை அகற்றியே ஆக வேண்டும் என்ற கருத்து பண்டையகால தமிழ் மரபிற்கும், தமிழ் மக்களுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது. சமாஜ்வாதி கருத்தை வரவேற்றதன் மூலம் காங்கிரஸின் தமிழர்கள் மற்றும் தமிழ் மரபுக்கு எதிரான சுயரூபமும் வெளிவந்துள்ளது. நீதியின் சின்னமாக, தமிழர்களின் பெருமையாக திகழும் செங்கோலை அகற்ற கோரும் சமாஜ்வாதியின் கருத்திற்கு எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்காமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மவுனம் காப்பது ஏன்?. இவ்வாறு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.