மீனவர்கள் கைது பிரச்னை: மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் அளித்த பதில் கடிதம்!

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர் கதையாக நீடித்து வருகிறது. மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகளின் பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கடந்த கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தது மீனவர் சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில், “தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும். தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

2024 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “இது தமிழக மீனவர்களிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இந்த விஷயத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் உடனே தலையிட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார். இந்த மாதத்தில் மட்டும் 3 முறை கடிதம் எழுதி இருந்தார் முதல்வர்.

இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “மீனவர்கள் பிரச்னை தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் வந்தது. 34 இந்திய மீனவர்கள் இலங்கையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் தண்டனை பெற்று தண்டனை சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். கொழும்புவில் உள்ள இந்திய தூதரம், யாழ்பாணத்தில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கைது செய்யப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீனவர் பிரச்னை 1974ஆம் ஆண்டு ஆரம்பித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். எப்போதும் அவ்வாறு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.