மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரால் ஜாபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் திமுக நிர்வாகியான இவர், தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து உள்ளார். டெல்லியில் போதை பொருள் கடத்தல் கும்பலில் ஒருவராக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் செயல்பட்டதாகவும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களை ஹெல்த் மிக்ஸ் பவுடர் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக என்.சி.பி அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாபர் சாதிக் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா மற்றும் அவரது சகோதரர் சலீம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கை அதிரடியாக கைது செய்துள்ளது. மேலும், ஜாபர் சாதிக்கை சென்னைக்கு கொண்டு வந்து காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில், ஜாபர் சாதிக்கை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை அனுமதி கோரி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.