சென்னை சைதாப்பேட்டையில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், மிக அடிப்படை தேவையான குடிநீரை கூட சுகாதாரமான முறையில் வழங்க அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதிசெய்ய முடியவில்லை என்பது, நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
பிகாரை சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டைக்கு வந்தனர். அவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு 11 வயது மகன் இருந்தனர். இந்த நிலையில் திடீரென சிறுவனுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டது. தொடந்து 10 நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இந்த நிலையில் இன்று மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டார். இதேபோல் சிறுவனின் சகோதரியான 7 வயது மகளுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவன் அப்பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிந்தந்தாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர்கள் வசிக்கும் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், அதை குடித்ததால் தான் சிறுவன் உயிரிழந்து இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர். எனினும் இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாக செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு அலட்சியப்போக்குடன் இருந்த விடியா திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறைக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்திற்கும் எனது கடும் கண்டனம்.
மக்கள் வாழ்வியலுக்கு மிக அடிப்படை தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதிசெய்யமுடியவில்லை என்பது, நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது. தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக அரசையும், அதன் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.