தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக சட்டப் பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தொழிற் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று பதிலளித்து பேசியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தேவையான நிலங்களை எடுத்துக் கொடுத்தால் அந்த பகுதிகளில் சிப்காட் அமைத்துதரப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இதுவரை 379 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.
இதுதவிர பொருளாதாரம் சமச்சீரான வளர்ச்சியை பெறுவதற்காக தென் மாநிலங்கள், டெல்டா, மேற்கு மண்டலங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், துாத்துக்குடியில் மின்வாகன தொழிற்சாலையும், டெல்டா பகுதிகளில் 300 ஏக்கரில் ரூ.161 கோடியில் புதிய சிப்காட் அமைக்கப்பட உள்ளது.
ஓசூரில் புதிய பன்னாட்டு விமானநிலையம் அமைப்பது தொடர்பாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக பலரும் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். ஆனால், புதிய விமான நிலையம் கண்டிப்பாக அமைக்கப்படும். இதன்மூலம் வடமேற்கு மாவட்டங்களில் தொழில் வளம் பெருகும். இதுதவிர ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்கிறார். இந்தபயணத்துக்கு பிறகு அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன. தமிழக அரசின் ‘வலிமை’ சிமென்ட் வந்ததை அடுத்து தனியார் சிமென்ட் விலை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.