அமைச்சர் துரைமுருகனை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா!

தமிழகத்தில் மணல் கடத்தல் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதமும் எழுதியுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகனை கைது செய்ய வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழகத்தில் சுமார் ரூ 4,730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஏற்கெனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. மணல் குவாரிகளில் ஏற்கெனவே மத்திய புலனாய்வுத் துறை அமைப்புகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் தமிழகத்தில் மணல் கொள்ளை நடந்துள்ளதாகவும், சுமார் 4700 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மணல் கொள்ளை குறித்து தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதமும் எழுதியுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகனை கைது செய்ய வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் செய்திகளை பகிர்ந்துள்ள அவர், ”தமிழக காவல்துறை என்ன செய்கிறது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது. பாஜக போராட்டத்தை தடுப்பது பாஜகவினர் மீது வழக்கு தொடர்வது, திமுகவின் boy scout போல் செயல்படுவது இது மட்டுமே அவர்கள் பணி. டிஜிபி முழு விளக்கம் தர வேண்டும். குற்றசாட்டில் உண்மையிருப்பின் துறைமுருகனை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த திமுக ஊழல் ஆட்சியிலிருந்து தமிழகத்திற்கு விரைவில் விடுதலை தேவை” என பகிர்ந்துள்ளார்.