தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் இன்று (ஜூன் 30) காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் நடந்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தான் சோதனை நடப்பதாக தெரிகிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் உள்ள அப்துல் கான் என்பவரின் வீட்டிற்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்றுள்ளனர். அங்கு ஏதேனும் ஆவணங்கள், பயங்கரவாத செயல்களுக்கு தொடர்புடைய விஷயங்கள் கிடைக்கின்றனவா என்று சோதனைகள் நடந்து வருகின்றன. இவருக்கும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று ரெய்டின் முடிவில் தெரியவரும்.
இந்த சோதனையில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமாக இருப்பது ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடைய நபர்கள் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இவர்கள் தங்களது இயக்கத்திற்கு தமிழகத்தில் இருந்து புதிதாக ஆட்கள் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை தடுக்கும் நோக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் களத்தில் இறங்கியிருக்கின்றனர். குறிப்பாக சென்னையில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரிலேயே தடை செய்யப்பட்ட இயக்கத்தின் நடமாட்டமா? என்ற கேள்வி எழுகிறது.
இந்த சோதனையின் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கின? ரகசிய திட்டங்கள் ஏதும் தீட்டப்பட்டுள்ளதா? புதிதாக ஆட்கள் சேர்க்கும் தகவல் எந்த அளவிற்கு உண்மை? அப்படி சேர்க்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? யார் யார்? அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? போன்றவை குறித்து தெரியவரும்.