தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர மானிய விலையில் கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி அட்டைதாரர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் என இரண்டு வகையாக ரேஷன் அட்டைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் ரேஷன் அட்டை மூலம் பொது விநியோக திட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள். பொதுமக்களுக்கு பயனுள்ள பொருள்களை வழங்குவது அரசின் கடமை.
பொது விநியோக திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகளில் அரசி, பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. பாமாயில் பெரும்பாலும் அயல்நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்யை மக்களுக்கு வழங்கினால் நம் நாட்டைச் சேர்ந்த சிறு, குறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள். அப்படி செய்வதன் மூலமாக உள் நாட்டு வருமானமும் உயரும். தேங்காய் எண்ணைய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தும் போது பல்வேறு பயன்களும் உள்ளன. இதனால் பல்வேறு உடல் நோய்கள் தடுக்கப்படுகிறது, கட்டுக்கள் கொண்டு வரப்படுகிறது.
ஆகவே ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக உடல் ஆரோக்யத்தை தரும் உள் நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.