நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கவை 7 ரன்களில் வீழ்த்தியது. பாண்டியா, பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். டி20 உலகக் கோப்பை அரங்கில் இந்தியா வெல்லும் இரண்டாவது சாம்பியன் பட்டம் இது.
மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. டிகாக் மற்றும் ரீசா ஹென்ரிக்ஸ் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இரண்டாவது ஓவரில் ஹென்ரிக்ஸை அவுட் செய்தார் பும்ரா. அடுத்த ஓவரில் அந்த அணியின் கேப்டன் மார்க்ரமை அவுட் செய்தார் அர்ஷ்தீப். அதன் பிறகு ஸ்டப்ஸ் உடன் இணைந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் டிகாக். 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். அவரை அக்சர் படேல் அவுட் செய்தார்.
தொடர்ந்து வந்த கிளாசன் உடன் இணைந்து 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் டிகாக். அவர் 39 ரன்களில் அர்ஷ்தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அதிரடியாக ஆடி மிரட்டினார் கிளாசன். டேவிட் மில்லருடன் இணைந்து 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தார். 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.
17-வது ஓவரின் முதல் பந்தில் கிளாசன் விக்கெட்டை வீழ்த்தினார் பாண்டியா. அப்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து இருந்தது தென் ஆப்பிரிக்கா. அந்த அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்களை மட்டுமே பாண்டியா கொடுத்திருந்தார். அந்த ஓவர் இந்திய அணிக்கு ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
18-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் இரண்டு பந்து டாட். அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார் மில்லர். நான்காவது பந்தில் யான்சன் விக்கெட்டை வீழ்த்தினார். பந்து ஸ்டம்புகளை தகர்த்தது. கேஷவ் மகாராஜ் பேட் செய்ய வந்தார். ஐந்தாவது பந்தும் டாட் ஆனது. அடுத்த பந்தில் மகாராஜ் சிங்கிள் எடுத்தார். கடைசி 12 பந்துகளில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். ஸ்ட்ரைக்கில் மகாராஜ் இருந்தார். முதல் இரண்டு பந்து டாட். மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். நான்காவது பந்தில் மில்லர் இரண்டு ரன்கள் எடுத்தார். ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். கடைசி பந்து டாட் ஆனது.
கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் மில்லர் இருந்தார். அந்த ஓவரை பாண்டியா வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார் மில்லர். பவுண்டரி லைனில் இருந்த சூர்யகுமார் யாதவ் அசத்தல் கேட்ச் பிடித்து கலக்கினார். பந்தை பிடித்து, அதை காற்றில் தூக்கி போட்டு, பவுண்டரி லைனுக்கு வெளியில் சென்று, மீண்டும் உள்ளே வந்து கேட்ச் பிடித்திருந்தார். மில்லர் அவுட். அது அபாரமான கேட்ச். இரண்டாவது பந்தில் பவுண்டரி விளாசினார் ரபாடா. அது எட்ஜ் ஆகி சென்றது. 4 பந்துகளில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. நான்காவது பந்தில் மகாராஜ் சிங்கிள் எடுத்தார். கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. பாண்டியா வொய்டு வீசினார். அந்த எக்ஸ்ட்ரா பந்தில் ரபாடா கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி பந்தில் 9 ரன்கள் அந்த அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. அதன் மூலம் இந்தியா 7 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில் இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்ட பதிவில், சாம்பியன்ஸ்! டி20 உலக கோப்பையை தனக்கே உரிய பாணியில் நம்முடைய அணி, இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது!
இந்திய கிரிக்கெட் அணியால் நாம் பெருமை கொள்கிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது என அவர் தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றனர். இந்திய அணி சவாலான தருணங்களில் நிகரில்லாத திறமையை வெளிப்படுத்தி யாராலும் தோற்கடிக்க முடியாத சாதனை படைத்துள்ளது. வாழ்த்துகள் இந்திய அணி என்று பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 17 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துகள். டி20 உலகக்கோப்பை 2024 இறுதிப் போட்டியின் கடைசி ஓவர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. தலைசிறந்த டெத் ஓவர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூர்யகுமார் யாதவின் கேட்ச் அற்புதமானது. தொடக்கம் முதலே சிறப்பாக இந்திய அணி செயல்பட்டது. வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது வாழ்த்து செய்தியில், கடும் நெருக்கடிகளை கடந்து ஆட்டத்தை வென்றெடுத்து இறுதியில் உலக கோப்பையை உறுதி செய்துள்ளது இந்திய அணி. மதம்-இனம் கடந்து இந்திய நாட்டிற்காக வியர்வை சிந்தி விளையாடி கனவுக்கோப்பையை கைப்பற்றி களத்தில் கண்ணீர் சிந்தியுள்ளனர் இந்திய வீரர்கள். இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது என்று பகிர்ந்திருக்கிறார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் அற்புதமாக விளையாடி வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த ஐசிசி கோப்பையை வெல்வதற்கு நம்முடைய சாம்பியன் அணி முழு தகுதி பெற்றிருப்பது என்பதில் சந்தேகமில்லை என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய வாழ்த்து செய்தியில், ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி ஆச்சரியமூட்டும் வெற்றியை பெற்றதற்கு வாழ்த்துகள். ஒருகட்டத்தில் தோல்விக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் இந்திய அணி விட்டுக் கொடுக்கவில்லை. தொடர்ந்து போராடியது. விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்து கொண்டே இருந்தது. இறுதியாக அந்த அற்புதமான கேட்ச் தான் வெற்றியை பெற்று தந்தது. இந்த தொடர் முழுவதுமே சாம்பியன்களை போல நம்முடைய வீரர்கள் ஆடினர். இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.