“வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுகளையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடிமை வம்சத்தில் இருந்து வந்த உங்களைப் பற்றியும் நாங்கள் விமர்சிக்க நேரிடும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப் பெருந்தகை கூறியதாவது:-
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் பேரியக்கம், திமுகவுக்கு அடிமையாக இருப்பதாக அண்ணாமலை பேசியுள்ளார். இது போன்ற வெறுப்பு அரசியலை, அவதூறு பேச்சுக்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிருங்கேரி மடத்தின் ரகசியத்தை நாங்கள் வெளியிடுவோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்த மர்மத்தை வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்தும் அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் ஏற்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும் சட்டப்பேரவையில் முதல்வர் தெளிவாக எடுத்துரைத்து விட்டார். இந்நிலையில், அதுகுறித்து பேசுவது ஏற்புடையதல்ல. மேலும், பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்தும் அப்போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும் பேச தயாரா?.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்தியாவில் உத்தரப் பிரதேசம், குஜராத்தில் தான் கள்ளச் சாராய சாவுகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. அங்கெல்லாம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டதா? இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் குறித்த விசாரணையை சிபிசிஐடி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.