நீட் முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு!

நீட் முறைகேடு குறித்தும், மத்திய ஏஜென்சிகள் கட்டுப்பாடுகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்

18-வது மக்களவை கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து இன்று (ஜூலை 1) கூடியது. அப்போது உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீட் முறைகேடு விவகாரத்தை மக்களவையில் எழுப்பினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் இருந்து நாட்டுக்கு ஒரு செய்தி பரப்பப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு நீட் விவகாரம் முக்கியம் என்ற செய்தியை மாணவர்களுக்கு கடத்த விரும்புகிறோம். எனவே, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாடாளுமன்றத்துக்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிறகு விவாதங்கள் நடத்தப்படும்” என்றார். அதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.

பின்னர் மக்களவையின் இரண்டாவது அமர்வில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பாஜக எம்பி அனுராக் தாக்கூர் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தை பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ் ஆதரித்தார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசிவருகின்றனர்.