தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்!

இலங்கையில் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய இரா.சம்பந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும், உலகெங்கும் வாழும் இலங்கை தமிழர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக, கிழக்கு திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் எம்.பியாக செயல்பட்டு வந்தவர் இரா.சம்பந்தன். நாடாளுமன்றத்தில் சிறப்பான முறையில் பல்வேறு முக்கிய விஷயங்களை எடுத்துரைத்தவர். எதற்கும் அஞ்சாமல் தனது அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்.

இவர் வயது மூப்பின் காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் சமீப காலமாக நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் தவித்து வந்தார். முக்கியமான அரசியல் தலைவர்களை மட்டும் சந்தித்தார். மூன்று மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் காண முடியவில்லை. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்புவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 91. இவரது மறைவிற்கு பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் இலங்கை தமிழர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான போரின் போது தமிழ் மக்களின் குரலாக ஒலித்தவர். 2015 முதல் 2018 வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அரை நூற்றாண்டிற்கும் மேலாக நாடாளுமன்ற தலைவர் என்ற சிறப்பை பெற்றவர். 2009ஆம் ஆண்டு ஈழப் போர் முடிவடைந்த பிறகு, தமிழர்களுக்கான உரிமைகளை பெற்று தர வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டார். இலங்கையில் ஒற்றுமையாக தமிழர்கள் வசிக்கும் வேண்டும் என்று விரும்பினார். வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள இரா.சம்பந்தனனின் மறைவு பலருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.