புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம்: ப.சிதம்பரம்!

“புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம். ஆனால் இந்தச் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகலே தவிர வேறொன்றும் இல்லை” என முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

புதிய சட்டங்கள் என்றழைக்கப்படும் இவற்றில் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகல் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே அமலில் இருந்த சட்டங்களில் சில உரிய திருத்தங்களை மேற்கொண்டு அமல்படுத்தியிருக்க வேண்டியதை புதிதாக மூன்று சட்டங்களாக மாற்றி வீணான செயலை மத்திய அரசு செய்துள்ளது. புதிய சட்டங்களில் சில மேம்படுத்தப்பட்ட விஷயங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் வரவேற்றுள்ளோம். ஆனால் அதனை சட்டத்திருத்தம் வாயிலாகவே செய்திருக்கலாமே!

புதிய குற்றவியல் திருத்தச் சட்ட மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். சில குறிப்புகளைக் கொடுத்திருந்தனர். ஆனால் அவை கருத்தில் கொள்ளப்படவில்லை. இச்சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எவ்வித ஆக்கபூர்வமான விவாதமும் செய்யப்படவில்லை.

சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் கூட்டமைப்புகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எனப் பல்துறை நிபுணர்களும் இச்சட்டத் திருத்தம் தொடர்பாக பல விமர்சனக் கட்டுரைகளை எழுதினர். மூன்று சட்டங்களின் மிக மோசமான குறைபாடுகளை அவர்கள் சுட்டிக் காட்டினர். ஆனால் அரசாங்கத்தில் ஒருவர்கூட இந்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்க அக்கறை கொள்ளவில்லை.

இந்த மூன்று சட்டங்களும் போதிய விவாதமும், ஆராய்ச்சியும் இல்லாமல் பழைய சட்டங்களைத் தரைமட்டமாக்கி கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆகையால் குற்றவியல் நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இதன் முதல் தாக்கமாக இருக்கும். அடுத்ததாக பல்வேறு நீதிமன்றங்களிலும் இந்தப் புதிய சட்டங்களால் பல சவால்கள் உருவாகும். காலப்போக்கில், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித் துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க மூன்று சட்டங்களில் மேலும் பல மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் உருவாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.