தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து செல்லும் போக்கு தொடர் கதையாகி வருகிறது. அதில் இன்றைய தினமும் (ஜூலை 1) ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று காலை தனுஷ்கோடியில் இருந்து 4 நாட்டு படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 25 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களது நான்கு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இது மீனவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. வழக்கமாக விசைப்படகு மீனவர்கள் தான் எல்லை தாண்டி செல்வர். மீன்கள் கிடைக்காமல் இருந்தால் தொடர்ந்து நகர்ந்து கொண்டே சென்று விடுவர். இது சிக்கலில் கொண்டு போய் நிறுத்தி விடும். ஆனால் நாட்டுப் படகு மீனவர்கள் அப்படியில்லை. பாரம்பரியமாக மீன் பிடிக்கும் இடங்களில் தான் மீன் பிடிப்பர். அரிதாக காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் எல்லை தாண்ட வாய்ப்புள்ளது. ஆனால் இன்று நடந்த சம்பவம் என்பது அப்படி அல்ல. கச்சத்தீவு அருகே தான் மேற்சொன்ன 4 நாட்டு படகுகளில் சென்ற மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் நெடுந்தீவு அருகே மீன் பிடித்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறி இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றதாக தமிழக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர். தடை செய்யப்பட்ட வலைகளையோ, மீன் வளத்தை அழிக்கும் வகையிலோ செயல்படவில்லை. இருப்பினும் இலங்கை கடற்படை பொய் புகாரை கூறி தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது. இன்று நடந்த சம்பவம் என்பது தமிழக மீனவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி தான் என குறிப்பிட்டுள்ளனர்.

உடனடியாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டு தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களில் தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.