ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலிப் பத்திரம் மூலமாக ஏழு பேர் பத்திரப் பதிவு செய்திருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர், கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருத்தார். இந்த வழக்கில் காவல்துறையினர் தன் மீது எப்ஐஆர் போடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிந்த, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த ஜூன் 25ம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் மேல்முறையீடு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிபிசிஐடி போலீசார் அவரை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே எம்.ஆர்.விஜய பாஸ்கர் மீது புகார் அளித்த பிரகாஷ் என்பவர் அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில். 100 கோடி ரூபாய் மதிப்புகொண்ட அந்த 22 ஏக்கர் நிலத்தை, தான் சொல்லும் நான்கு நபர்களுக்கு எழுதித் தரும்படி எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்னை மிரட்டி வந்தார் . எனவே அந்தச் சொத்தை என் மகள் சோபனா பெயரில், தான செட்டில்மென்ட் எழுதிக் கொடுத்தேன். இதனால் என்னுடைய மகள் சோபனாவை மிரட்டி, கையெழுத்து பெற்றதுடன். மோசடியாக ஒரு கிரயப் பத்திரத்தை பதிவுசெய்தது விட்டது எம்ஆர் விஜயபாஸ்கர் தரப்பு. நான் கொடுத்திருந்த ரூ.10 கோடி கடனுக்கு, கடந்த ஆறு மாத காலமாக விஜயபாஸ்கர் வட்டியும் தரவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் எம்.ஆர்.விஜய பாஸ்கர் வெளிமாநிலங்களுக்கு சென்று தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து தனிப்படை போலீசார் வெளிமாநிலங்களுக்கு விரைந்து சென்றுள்ளனர். அண்மையில் கேரளாவில் தங்கி உள்ளதாக தகவலை அடுத்து அங்கும் சென்றும் தேடி வருகிறார்.
இந்நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல் நிலைய போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை எம்ஆர் விஜயபாஸ்கர் பெயர் வழக்கில் சேர்க்கப்படாத நிலையில், தற்போது பெயர் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.